பழநி, நவ. 28: தமிழ்நாட்டில் முருங்கை ஏற்றுமதியை அதிகரிக்கவும், ஏற்றுமதி சந்தையில் முருங்கை விவசாயிகள் நேரடியாக ஈடுபட்டு அதிக வருமானம் பெறவும் திண்டுக்கல், கரூர், தேனி, திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை, கடலூர், அரியலூர் மற்றும் மதுரை ஆகிய 9 மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரையை தலைமையிடமாக கொண்டு முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வருவாய் கிராமம் வாரியாக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி பழநி அருகே போடுவார்பட்டியில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. வட்டார தேட்டக்கலை உதவி இயக்குநர் சபீனா தலைமை வகித்தார். போடுவார்பட்டி ஊராட்சி தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். மையத்தின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஒனியரசன் உள்ளிட்டோர் முருங்கை பயிருக்கான உற்பத்தி, அங்கக சாகுபடி தொழில்நுட்ப முறைகள், மதிப்பு கூட்டுதல், ஏற்றுமதி மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். விவசாயிகள் முருங்கை ஏற்றுமதி தொடர்பாக 82485 05604, 9344776830 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாமென அறிவுறுத்தப்பட்டது. இதில் ஏராளமான முருங்கை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

