பழநி, செப். 22: பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என பழநி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய வனப்பரப்பை கொண்டது பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனச்சரகங்கள். இவ்வனச்சரகங்களில் வரிப்புலி, சிறுத்தை, யானை, மான், கேளையாடு, கரடி, காட்டு மாடு, காட்டுப்பன்றி போன்ற விலங்கினங்களும் மற்றும் விலையுயர்ந்த மரங்கள், அரிய வகை மூலிகை செடிகள் அதிகளவு உள்ளன.
மேலும் பிற மாநிலங்களில் இருந்து வந்து இனப்பெருக்கம் செய்து பழநி மலைக்காடுகளில் ஏராளமான பறவை இனங்கள் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பறவையினங்களை சிலர் வேட்டையாடி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழநி வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பறவைகளை பாதுகாப்பது மனிதனின் கடமை. பறவைகள் வேட்டையாடுவது தெரியவந்தால் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.