ஒட்டன்சத்திரம், செப். 22: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது உறவுக்கார பெண் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகா (25). இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் சொந்த ஊரில் திருமணம் செய்து கொண்டனர்.
அதன்பின் இருவரும் வேலைக்காக ஒட்டன்சத்திரம் அருகே சின்னகரட்டுப்பட்டி பகுதியில் குடியேறினர். சங்கர் அங்குள்ள தனியார் குவாரியில் டிரைவராக பணியாற்ற, கார்த்திகா அதே பகுதியில் உள்ள பேக்கரியில் கேசியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி வேலை முடிந்து வீட்டிற்கு வந்து தூங்க சென்றுள்ளனர்.
நேற்று அதிகாலையில் சங்கர் எழுந்து பார்த்த போது கார்த்திகா வீட்டுக்குள் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த அம்பிளிக்கை போலீசார் கார்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதங்களே ஆவதால் பழநி கோட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.