நிலக்கோட்டை, அக். 12: நிலக்கோட்டையில் பொதுமக்கள் அதிகம் கூடும் நால்ரோடு பகுதியில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதில் மதுரை, வத்தலக்குண்டு, பெரியகுளம், கொடைக்கானல், உசிலம்பட்டி, செம்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட சாலைகளை இணைக்கும் நால்ரோடு பகுதி உள்ளது. இப்பகுதி நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவல் நிலையம் என ஒருங்கிணைந்த அரசு அலுவலகங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட், தினசரி காய்கறி சந்தை, வாரச்சந்தை என தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.நெரிசல் மிகுந்த நால்ரோட்டில் இருந்து செம்பட்டி செல்லும் சாலை, கடைவீதி, சந்தைக்கு செல்லும் அணைப்பட்டி சாலை என பொதுமக்கள் அதிகம் கூடும் குறுகலான சாலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி தரக்கூடாது. ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த பழைய உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க புறநகர் மற்றும் அகலமான சாலை பகுதிகளில் மட்டும் பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் வழங்க வேண்டும். பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கும் முன்பு சம்பந்தப்பட்ட இடத்தை மாவட்ட ஆட்சியர், மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் தீயணைப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.