திண்டுக்கல்,டிச.9: திண்டுக்கல் கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ். நாகராஜன் அறிவியல் அறக்கட்டளை சார்பில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே அறிவியல் சிந்தனை, புத்தாக்கத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அறிவியல் சுருள்படப் போட்டி டிச.18ம் தேதி வரை நடைபெறும். போட்டியில் 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் 60 நொடிகளுக்குள் சுருள்படங்களைச் சமூகத்தளங்களில் வெளியிடலாம்.
சுருள்பட உள்ளடக்கமானது ஒரு அறிவியல் தத்துவத்தையோ, கருவிகளின் அறிவியல் செயல்முறையையோ, இயற்கையின் அறிவியலையோ, தொழில்நுட்பம், புத்தாக்கம், சுற்றுச்சூழல், விண்வெளி, ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, வேளாண் அறிவியல் போன்ற தலைப்புகளிலோ இருக்கலாம். அதன் மூலம் அறிவியல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதுடன், புதிய கண்டுபிடிப்பு எண்ணங்கள் சமூகத்தில் பரவ வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


