திண்டுக்கல், டிச.2: திண்டுக்கல்லில் ஒன்றிய அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஸ்டாலின், ஒன்றிய துணை செயலாளர் பாலமுருகன், சிபிஎம் மாநகர செயலாளர் அரபு முகமது, மாநகராட்சி கவுன்சிலர் கணேசன் முன்னிலை வகித்தனர். இதில் பாராளுமன்றத்தில் 2016 மாற்றுத்திறனாளிகள் சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்த வேண்டும்,மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்த வேண்டும், ஒன்றிய அரசு ரூ.300 மட்டுமே உதவித்தொகையாக வழங்கி வருகின்றது. எல்லா பொருட்களின் விலை மற்றும் வரியையும் ஒன்றிய அரசு வரி உயர்த்தி உள்ளது. ஆகையால் மாற்றுத்திறனாளிக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement

