ரெட்டியார்சத்திரம், செப். 2: ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பன்றிமலை பகுதியில், கன்னிவாடி வனச்சரகர் குமரேசன் தலைமையில் வனவர் பீட்டர் ராஜா, வனக்காப்பாளர் சிவகணேசன் மற்றும் வன பாதுகாவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது அமைதிச் சோலை அருகே 30 அடி பள்ளத்தில் ஆண் ஒருவர் இறந்துகிடந்தார். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கன்னிவாடி போலீசாருக்கு வனத்துறையினர் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கன்னிவாடி எஸ்ஐ சிராஜூதீன் மற்றும் போலீசார் அங்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது இறந்து கிடந்தவர் குறித்த விபரங்கள் ஏதும் தெரியவரவில்லை. இதையடுத்து உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.