Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு பாதுகாப்பிற்கு சிறப்பு சிகிச்சை மையம்: அப்போலோ மருத்துவமனை தொடங்கியது

சென்னை: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு பாதிப்பிலிருந்து பாதுகாப்பை அளிக்கும் அதிநவீன சிகிச்சை மையத்தை அப்போலோ மருத்துவமனை தொடங்கியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அப்போலோ ஃபர்ஸ்ட் மெட் மருத்துவமனையில் நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் பாதங்களைப் பராமரிக்கும் நீரிழிவு மூட்டு பாதுகாப்பு மையத்தை [Advanced Diabetic Limb Saving Centre] தொடங்கி உள்ளது. ‘‘உயிர்களை காப்பாற்ற மூட்டுகளைக் காப்பாற்றுவோம்’’ என்ற வாசகத்தை முன்னிறுத்தி சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. மேம்பட்ட நீரிழிவு மூட்டு பாதுகாப்பு மையமானது கீழ்ப்பாக்கம் அப்போலோ ஃபர்ஸ்ட் மெட் மருத்துவமனைகளில் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழன் கிழமையில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படும். அதிக ஆபத்து உள்ள கால் பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தீர்வுகளை அளிக்கும் சரியான சிகிச்சை உத்திகள், நோயாளிகளுக்கு கடுமையான அறுவை சிகிச்சைகளின் தேவையை வெகுவாக இந்த மையத்தின் மூலம் குறைக்கும்.

இந்த மையத்தை குறித்து மைக்ரோவாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் புருஷோத்தமன் மற்றும் சபரி கிரிஷ் அம்பாட் கூறியதாவது: நீரிழிவு மூட்டு பாதுகாப்பு சிகிச்சை மையத்தின் குறிக்கோள், பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்து, அவற்றுக்கான நவீன சிகிச்சை அளிப்பது தான். பொதுவாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால் நீண்ட நாட்களாக ஆறாத காயம் இருக்கும். எண்டோவாஸ்குலர் மற்றும் மைக்ரோ சர்ஜிக்கல் நுட்பங்களில் ஏற்பட்டிருக்கும் சமீபத்திய முன்னேற்றங்கள், மருத்துவர்கள் உடலில் உள்ள மற்ற பாகங்களிலிருந்து தோல் மற்றும் மென்மையான திசுக்களைப் பயன்படுத்தி நீண்டகாலமாக ஆறாமல் இருக்கும் காயங்களை துல்லியமாக குணப்படுத்த உதவுகின்றன.

இந்த புதுமையான அணுகுமுறையானது, துல்லியமான நீரிழிவு நோய் சிகிச்சை மேலாண்மை, அதிக அக்கறையுடனான காயப் பராமரிப்பு மற்றும் மிகவும் நுட்பமான அறுவை சிகிச்சை முறைகளின் சரியான பயன்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. எங்களிடம் சிகிச்சைப் பெறும் நோயாளிகளின் மூட்டு துண்டிக்கப்படுவதைத் தடுப்பதோடு, அவர்களது வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஒரு முழுமையான சிகிச்சையை வழங்குவது ஆகும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.