தர்மபுரி, செப்.27: தர்மபுரியில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் செயலாளர் பரிதிவேல், ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாவட்ட தலைவர் கோபாலன் ஆகியோர் தலைமையில் நடந்தது. ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாவட்ட உதவி செயலாளர் ரமேஷ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார். மாநில செயலாளர் ராஜசேகர், மாநில உதவி செயலாளர் உமாராணி, மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் உதவி செயலாளர் பாபு ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், பிஎஸ்என்எல் பொதுத்துறையில் 4ஜி சேவை நல்ல முறையில் வழங்க வேண்டும். பிஎஸ்என்எல்லில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 2017 ஜனவரி 1ம்தேதி முதல் சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் உயர்வு வழங்கவேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு பிஎப், இஎஸ்ஐ, போன்ற சமூக பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச சம்பளம் ரூ.26 ஆயிரம் வழங்கவேண்டும். டிசம்பர் 2025ல் கோவையில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டிற்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுப்பது. தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை வர மாநில அரசு விரைந்து செயல்படவேண்டும். 40 நாட்களாக போராடும் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.