பாப்பாரப்பட்டி, நவ.22: பாப்பாரப்பட்டி ஒன்றியம் பாலவாடி ஊராட்சிக்கு உட்பட்ட பையூரான் கொட்டாய் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். பள்ளிப்பட்டி - சவுளூர் சாலையில் இருந்து செல்லும் இணைப்பு தார்ச்சாலையானது போதிய பராமரிப்பு இல்லாமல் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு முரடாக மாறியுள்ளது. சைக்கிள், டூவீலர் உள்ளிட்டவை செல்ல முடியாத அளவுக்கு உள்ளது. அடிக்கடி டயர் பஞ்சராவதால் சிரமப்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த வழியாக செல்லும் பள்ளி கல்லூரி வாகனங்கள், விளை பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்லும் விவசாயிகள், வேலைக்கு வெளியூர் சென்றுவருவோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் டூவீலரில் வருபவர்கள் சறுக்கி விழுந்து அடிபடுகின்றனர். பழுதடைந்த தார்சாலையை சீரமைக்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு முரடான சாலையை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
+
Advertisement


