காரிமங்கலம், நவ.22: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏரிகளில் சட்ட விரோதமாக சிலர் மண் வெட்டி கடத்துவதாக புகார்கள் வந்தது. பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை வசம் உள்ள ஏரியில், அதிகாரிகள் சிலரின் ஆசியுடன் மண் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காரிமங்கலம் அடுத்த பைசுஅள்ளி குண்டலபட்டி ஏரியில் மண் எடுக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் காரிமங்கலம் தாசில்தார் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. விவசாய பணிகளுக்காக மட்டும் குறிப்பிட்ட அளவு மண் எடுக்க அனுமதி அளித்திருந்தனர.
ஆனால், மண் கடத்தல் கும்பல் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள், இரவு பகலாக விதிமுறைகளை மீறி டிப்பர் லாரிகள் உட்பட பல்வேறு பெரிய கனரக வாகனங்களில் மண்ணை லோடு லோடாக கடத்தி சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர். கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்பேரில், கனிமவளத்துறை அதிகாரிகள் நேற்று குண்டலபட்டி ஏரியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கமலேசன் என்பவருக்கு சொந்தமான பொக்லைன் இயந்திரம் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


