கடத்தூர், செப். 22: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி வன சரகத்திற்குட்பட்ட கடத்தூர் அருகே மணியம்பாடி வருவாய் கரடு வனப்பகுதியில், மலை கற்றாழை கள்ளத்தனமாக வெட்டப்படுவதாக, அரூர் வன அலுவலர் ஆனந்த்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், வனவர் கணபதி அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, கரடு வனப்பகுதியில் மலை கற்றாழைகளை வெட்டிக்கொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த முருகன், சிவலிங்கம் ஆகிய இருவரையும் பிடித்தனர். பின்னர், மலை கற்றாழை வெட்டிய குற்றத்திற்காக, உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் சரவணன், இருவருக்கும் தலா ரூ.15ஆயிரம் வீதம், ரூ.30ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினார்.