பாப்பாரப்பட்டி, நவ.21: சித்தனஅள்ளி கிராமத்துக்கு செல்லும் தார்சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். பாப்பாரப்பட்டி அருகே உள்ள சித்தனஅள்ளி கிராமத்தில், சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் பயன்பாட்டில் உள்ள தார்சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக உள்ளது. பாப்பாரப்பட்டி பாலக்கோடு நெடுஞ்சாலையில் இருந்து ஜெர்தலாவ் கிளை கால்வாய் வரை செல்லும், சித்தனஅள்ளி பகுதிக்கு தார்சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது கப்பி சாலை போல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பள்ளி, கல்லூரி வாகனங்கள், வேலைக்காக வெளியூர் செல்பவர்கள், விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச்செல்வது, விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லும் போது பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. இது தவிர, அரசு பள்ளிக்கு சைக்கிள் மூலம் செல்லும் மாணவ, மாணவிகள் அடிக்கடி டயர் பஞ்சர் ஆவதால் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
+
Advertisement


