காரிமங்கலம், நவ. 12: காரிமங்கலம் பேரூராட்சியில் ராமசாமி கோவில் பஸ் நிறுத்த பகுதியில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்கூடத்தின் முன்புறத்தில், பானிபூரி கடை உட்பட தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த நிழற்கூடத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சாலையிலேயே நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் அருகில் துணை சுகாதார நிலையம் மற்றும் சுகாதார வளாகம் உள்ள நிலையில், மேற்கண்ட பகுதிகளும் ஆக்கிரமிப்பு காரணமாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, பலமுறை நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
