தர்மபுரி, டிச.11: தென்மேற்கு ரயில்வேயின் மைசூரு பிரிவு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு ரயில்வேயின் மதுரை பிரிவில், மீளவிட்டான் மற்றும் தூத்துக்குடியில் யார்டு மறுவடிவமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக, பின்வரும் ரயில் சேவைகள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. இதன்படி, ரயில் எண் 16235 தூத்துக்குடி மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில், இந்த மாதம் 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மற்றும் வாஞ்சி மணியாச்சி சந்திப்பிற்கு இடையே, பகுதியளவு ரத்து செய்யப்படும். மேலும் தூத்துக்குடிக்கு பதிலாக வாஞ்சி மணியாச்சியில் இருந்து புறப்படும். இதே போல், இந்த மாதம் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தொடங்கும் ரயில் எண் 16236 மைசூர் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில், வாஞ்சி மணியாச்சி சந்திப்புக்கும், தூத்துக்குடிக்கும் இடையில் ரத்து செய்யப்படும். ஆனால் தூத்துக்குடிக்குப் பதிலாக வாஞ்சி மணியாச்சியில் நிறுத்தப்படும். இந்த ரயில்கள் தவிர, இந்த மாதம் 21ம் தேதி தொடங்கும் ரயில் எண், 19567 தூத்துக்குடி ஓகா எக்ஸ்பிரஸ், தூத்துக்குடிக்கும் கோவில்பட்டிக்கும் இடையில் பகுதியளவு ரத்து செய்யப்படும். மேலும், தூத்துக்குடிக்கு பதிலாக கோவில்பட்டியிலிருந்து புறப்படும். இந்த மாதம் 19ம் தேதி தொடங்கும் ரயில் எண் 19568 ஓகா தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், கோவில்பட்டிக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் ரத்து செய்யப்படும். தூத்துக்குடிக்கு பதிலாக கோவில்பட்டியில் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


