தர்மபுரி, டிச. 11: வரத்து அதிகரித்த நிலையில், தர்மபுரியில் முருங்கை காய் மற்றும் பட்டாணி விலை சரிந்துள்ளது. தர்மபுரி உழவர் சந்தைக்கு, தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, மழையின் தாக்கத்தால் முருங்கைக்காய் வரத்து குறைந்தது. இதனால் ஒரு கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை உயர்வால், கடந்த 15 நாட்களாக தர்மபுரி உழவர் சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து முற்றிலும் குறைந்தது. தினசரி காய்கறி மார்க்கெட்டுகளுக்கு அரவக்குறிச்சியில் இருந்து முருங்கைகாய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று தர்மபுரி உழவர் சந்தைக்கு 100 கிலோ வரை முருங்கைக்காய் விற்பனைக்கு வந்தது. இதனால், ஒரு கிலோ ரூ.220க்கு விற்பனையானது. இதே போல், பச்சை பட்டாணி ஓசூர் மற்றும் ராயக்கோட்டையில் இருந்து 50 கிலோ அளவிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக பச்சை பட்டாணி ஒரு கிலோ ரூ.300 வரை விற்பனை செய்யப்படும். தற்போது சீசன் என்பதால், பச்சை பட்டாணி வரத்து இருமடங்காக அதிகரித்துள்ளது. இதனால், உழவர் சந்தையில் பச்சை பட்டாணி விலை மளமளவென சரிந்து, கிலோ ரூ.126க்கு விற்பனை செய்யப்பட்டது.


