தர்மபுரி, ஆக.8: தர்மபுரி அருகே, கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி அருகே, சோகத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (50). விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள பெரியாண்டிச்சியம்மன் கோயில் பூசாரியாக உள்ளார். வாரந்தோறும் இக்கோயிலில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் கால் பவுன் தங்கம் இருந்தது. பிறகு, மீண்டும் அவை உண்டியலில் வைத்து பூட்டி, கோயிலேயே வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் கோயில் பூட்டு உடைக்கப்பட்டு, உண்டியலில் இருந்த பணம், நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் டவுன் போலீசில் புகார் அளித்தனர். இதன் பேரில், விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement