அரூர், டிச.7: தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த மேலானூர் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி பாரதி. விவசாயியான இவர்கள் ஆடு, மாடுகளை வளர்த்தும் வருகின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 4 மணியளவில் வீட்டின் அருகே நாய் குரைத்துள்ளது. இதனால் பாரதி மற்றும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பழனி ஆகியோர் தூக்கம் விழித்து எழுந்து வீட்டின் வெளியே வந்தபோது, 3பேர் பாரதியின் மாட்டு கொட்டகையில் இருந்த 3 ஆடுகளை திருடிக்கொண்டு அங்கிருந்து டூவீலரில் தப்பிச்செல்ல முயன்றனர்.அவர்களை பாரதியும், பழனியும் பிடிக்க முயன்ற போது, அந்த நபர்கள் செல்போன், திருடிய 3 ஆடுகள் மற்றும் டூவீலரை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடிவிட்டனர். அவர்கள் துரத்திச்சென்றும் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பாரதி அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ஒருவரின் அடையாளம் தனக்கு தெரியும் எனவும், அவர் கீழ்மொரப்பூரை சேர்ந்த வசந்தகுமார் எனவும், பாரதி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய 3பேர் குறித்து, அவர்கள் விட்டு சென்ற செல்போனை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


