தர்மபுரி, அக்.7: தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ரத்தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 8,000 ஏக்கர் பரப்பளவில் கரும்பு நடவு மற்றும் மறுதாம்பு பயிரை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்படும் வறட்சியின் காரணமாக, கரும்பில் வெள்ளை நிற வேர்ப்புழுவின் தாக்கம் ஆங்காங்கே சில பகுதிகளில் காணப்பட்டது. இதனால், கரும்பு விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். கரும்பில் வேர்ப்புழுவின் தாக்கம் குறித்து வேளாண்மைத்துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலை துறை, அரூர் மற்றும் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் கரும்பு விவசாயிகள் ஆகியோர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நாளை(8ம் தேதி) காலை 11 மணியளவில் கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement