நல்லம்பள்ளி, ஆக.6: பெங்களூருவில் இருந்து காஸ் அடுப்பை ஏற்றிய கன்டெய்னர் லாரி, கோயம்புத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தனசேகர் (32) என்பவர் ஓட்டி வந்தார். தர்மபுரி மாவட்டம், தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. தொப்பூர் கணவாய் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் தாறுமாறாக ஓடியது. போலீஸ் குவார்ட்டர்ஸ் அருகே சென்றபோது, சாலையோர தடுப்பு சுவரில் மோதி, பள்ளத்தில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30அடி பள்ளத்தில் கன்டெய்னர் லாரி விழாமல் இருந்ததால், டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார், விபத்துக்குள்ளான லாரியை மீட்டு, போக்குவரத்தை சீர் செய்து விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
+
Advertisement