தர்மபுரி, ஆக. 6: மூக்கனூர் கிராமத்தில் ரயில் நிலையம் அமைக்க, கலெக்டர் அலுவலகத்தில் கருத்துகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. இதுதொடர்பாக வாக்கெடுப்பும் நடத்தப்பட்டதில் 139 பேர் ஆதரவும், 67பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். தர்மபுரி- மொரப்பூர் ரயில்வே பாதையில், ஆங்கிலேயர் காலத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. அப்போது மூக்கனூர் கிராமம் அருகே ரயில்நிலையம் இருந்தது. பின்னர், ரயில்கள் இயக்குவது நிறுத்தப்பட்டு, தண்டவாளங்கள் அகற்றப்பட்டன. இந்த ரயில்வே பாதை, 70 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் இருந்தது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மீண்டும் தர்மபுரி -மொரப்பூர் ரயில் திட்டம் பணிகள் தொடங்கப்பட்டது. தர்மபுரி அருகே மூக்கனூரில், ரயில் நிலையம் வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு சிலர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தை பழைய இடத்திலேயே அமைக்க வேண்டும். அங்கு நிலம் மற்றும் வீடுகள் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு, இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த வாரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, மூக்கனூர் ரயில் நிலையத்தை பழைய இடத்திலேயே அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என மற்ெறாரு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதனிடையே, நேற்று தர்மபுரி புதிய கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் சதீஸ் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் புதிய ரயில்நிலையம் வருவதற்கு நிலம் கொடுத்த 207பேர் கலந்து கொண்டனர். மற்றவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. எழுத்து மூலமாக வாக்கெடுப்பு நடந்தது. இதில் 139 பேர் பழைய இடத்திலேயே ரயில்நிலையம் அமைக்க வேண்டும் என ஆதரித்தனர். 67பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதி பெட்டியில் சீட்டை போட்டனர். இறுதியாக, அதிகமானோர் ஆதரித்த பழைய இடத்தில் ரயில் நிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று கலெக்டர் கூறினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். கருத்து கேட்பு கூட்டத்திற்காக மக்கள் வந்ததால், கலெக்டர் அலுவலக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.