பென்னாகரம், ஆக.5: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா ஏரியூர் அடுத்த நாகமரை பஞ்சாயத்துக்குட்பட்ட நெருப்பூர் மேல்காலனி பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக மின் மோட் டாரில் ஏற்பட்ட பழுதின் காரணமாக, இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று காலை சுமார் 9.30 மணியளவில், நாகமரை சாலையில் காலி குடங்களுடன் திரண்டனர். பின்னர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த, ஏரியூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மின் மோட்டார் பழுதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனால் சமாதான மடைந்த மக்கள், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
+
Advertisement