தர்மபுரி, டிச.2: தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில், உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து கையெழுத்து இயக்க தொடக்க விழா நேற்று நடந்தது. இப்பிரசாரத்தை மாவட்ட கலெக்டர் சதீஸ் தொடங்கி வைத்தார். முன்னதாக எச்ஐவி குறித்து கல்லூரி மாணவிகள், பாடலுக்கு நடனமாடி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இப்பேரணியானது தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் இருந்து நான்கு ரோடு, நெசவாளர் காலனி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பாரதிபுரம், இலக்கியம்பட்டி வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முடிந்தது. தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சக்திவேல் என்பவர், இலவச மூன்று சக்கர வாகனம் கேட்டு மனு அளித்தார். அதனை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், அருகிலுள்ள அம்மா உணவகத்திற்கு அழைத்துச்சென்று உணவு அளிக்குமாறு உதவியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.
+
Advertisement

