தர்மபுரி, நவ.1: தர்மபுரி குப்பாண்டித்தெரு ராஜாபேட்டை செல்லும் சாலையில் பழுதடைந்த மின்கம்பங்கள் உடனடியாக அகற்றிவிட்டு, புதிய மின்கம்பங்கள் நட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி நகராட்சி 7வது வார்டு குப்பாண்டித்தெரு ராஜாபேட்டை செல்லும் சாலையில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் அருகே 2 மின்கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பத்தில் இருந்து அருகில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு செல்கிறது. இந்த இரண்டு மின் கம்பங்களும் நட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில், தற்போது 2 மின்கம்பங்களும் விழும் நிலையில் உள்ளன. கம்பத்தில் உள்ள கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் துருப்பிடித்த நிலையில் வெளியே தெரிகிறது. எந்நேரத்திலும் விழும் நிலையில் உள்ள இந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு, புதிய மின்கம்பங்கள் நட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
+
Advertisement
