தர்மபுரி, ஆக.2: தர்மபுரி அருகே புதிதாக கோயில் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக கிராம மக்கள் திரண்டு வந்து எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மிட்டா தின்னஅள்ளி கோம்பேரி கிராமத்தைச் சேர்ந்த பூபால் மற்றும் கிராம மக்கள் நேற்று எஸ்பி ஆபீசுக்கு திரண்டு வந்து மனு அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: எங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் புதியதாக கட்டி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இக்கோயில் கட்டியதற்கான வரவு -செலவு கணக்குகளை காட்டவேண்டும் என கிராம மக்கள், கோயில் நிர்வாகிகளிடம் கேட்டனர். ஆனால், கணக்குகளை காட்டவில்லை. கோயில் பணத்தை கையாடல் செய்துள்ளதாக தெரிகிறது. அதனை சிலர் மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வரவு -செலவு கணக்கு கேட்டவர்கள் மீது நகை திருடி விட்டதாக பொய்யான குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர். இதனால், மனரீதியாக பாதிப்பிற்குள்ளாகி உள்ளோம். எனவே, இதுகுறித்து விசாரித்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.
+
Advertisement