அரூர், ஆக.4: ஆடிப்பெருக்கையொட்டி, அரூர் அருகே அம்மாபேட்டை தென்பெண்ணையாற்றில் குவிந்த மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். ஒகேனக்கல்லில் அரசு சார்பில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்ட நிலையில், கூட்டம் குறைவாக இருந்தது.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே அம்மாபேட்டை தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள சென்னம்மாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நேற்று நடைபெற்ற விழாவில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி அண்டைய மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் குடும்பத்தோடு வாகனங்களில் வந்து கோயிலில் குவிந்தனர். கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்ற வழிபட்ட மக்கள் ஆற்றங்கரையில் உள்ள பாறைகளை தெய்வமாக கருதி மஞ்சள், குங்குமம் தூவி பொரிகடலை, தேங்காய் உடைத்து, பழங்கள் படைத்து வழிப்பட்டனர். தொடர்ந்து பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டு அங்கேயே குடும்பத்துடன் சமைத்து சாப்பிட்டனர்.
இந்த ஆண்டு ஆற்றில் ஓரளவிற்கு தண்ணீர் சென்றது. தண்ணீர் ஓடியதால் பக்தர்களுக்கு வசதியாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. தர்மபுரி, ஊத்தங்கரை மற்றும் அரூரிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. டிஎஸ்பி கரிகால் பாரிசங்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வரும் 6ம் தேதி தீர்த்த யாத்திரை, கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.
பென்னாகரம்: ஆடிப்பெருக்கு விழாவின்போது, ஒகேனக்கல் காவிரியில் கூட்டம் அதிகரித்து காணப்படும். சுற்றுப்புற ஊர்களிலிருந்து கிராம தெய்வங்கள் மற்றும் குல தெய்வங்களின் விக்கிரகங்கள், சுவாமி பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்து காவிரியில் புனித நீராட்டி விட்டு பூஜை செய்து எடுத்துச் செல்வர். ஆனால், நேற்று ஆடிப்பெருக்கு விழாவின்போது, சுற்றுப்புற பகுதிகளிலிருந்து குறைந்தளவிலேயே பக்தர்கள் வந்திருந்தனர். இதனால், காவிரி கரையில் நடைபெறும் சிறப்பு வழிபாடு களையிழந்தது. அதே வேளையில் சுற்றுலா வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. காவிரி ஆற்றில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.
பின்னர், மீன் அருங்காட்சியகம், முதலைப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்தனர். கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும், மீன் மார்க்கெட் மற்றும் மீன் வறுவல் கடைகளிலும் விற்பனை படு ஜோராக நடைபெற்றது. அசம்பாவிதங்களை தடுக்க ஆலம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்புத் துறை மீட்பு படையினர் தீவிர ரோந்து சென்றனர். மேலும், மெயின் அருவி பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.