தர்மபுரி, ஆக.4: தர்மபுரி மாவட்ட நீர்நிலைகளில் சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமுதற் கடவுளான விநாயகர் அவதரித்த தினம், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் ஆண்டுதோறும் ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் கொண்டாடப்படும் பிரதான பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்றாகும். நாடு முழுவதும் பல லட்சம் பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், பக்தியுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஒன்று கூடுகிறார்கள். இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் கூடுதல் உற்சாகத்துடன் 10 நாட்கள் வரை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது இந்தியா மட்டுமின்றி நேபாளம், அமெரிக்கா, மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே சிலைகளை கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள்(கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்.
களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல்(பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கூடாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம்,எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள கீழ்கண்ட இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின் படி கரைக்க வேண்டும். வாணியாறு அணை, வரட்டாறு அணை, ஈச்சம்பாடி அணை, கேசர்குளிஹல்லா அணை, தென்பெண்ணையாறு, ஒகேனக்கல் (காவிரி ஆறு) ஆகிய இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். விநாயக சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.