தர்மபுரி, ஆக.3: முன்னணி நிறுவனத்தின் பெயர் கொண்ட இன்ஜின் ஆயிலை, ஜிஎஸ்டி பில் இல்லாமல், சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு கொண்டு வந்த வாகனத்தை, சிறை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டத்தில் இருந்து, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு ஜிஎஸ்டி பில் இல்லாமல், வாகனங்களுக்கு தேவையான போலியான இன்ஜின் ஆயில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தர்மபுரி மாவட்ட கல்ப் இன்ஜின் ஆயில் டீலர் மேலாளர் ராஜசேகர் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். சேலம்-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் தர்மபுரி அருகே சேசம்பட்டி பிரிவில், தர்மபுரி நோக்கி வந்த மினி சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்டோ மொபைல்ஸ் கடைகளுக்கு ஜிஎஸ்டி பில் இல்லாமல், வாகனங்களுக்கான இன்ஜின் ஆயில் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தை சிறைபிடித்து, அதியமான்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் ஆயில்களுடன் சேர்த்து வாகனத்தை வணிக வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.