தர்மபுரி, ஆக.3: தர்மபுரி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பட்டதாரி வாலிபரிடம் ரூ.9 லட்சம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட கடலை மிட்டாய் வியாபாரியை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி அருகே நாயக்கனஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன்(36). எம்ஏ., பிஎட் பட்டதாரி. தர்மபுரி ஹரிகரநாதர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாதவன்(57). இவர் கடைகளுக்கு கடலை மிட்டாய் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இதன் மூலம் திருமுருகனுக்கு, மாதவன் உடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தில் மாதவன், தனக்கு தெரிந்தவர் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக திருமுருகனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும், அதற்காக பணம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பிய திருமுருகன் ரூ.9 லட்சத்தை கொடுத்தார். மாதவன் பணம் வாங்கிக்கொண்டு, அரசு வேலை வாங்கி தரவில்லை.
பலமுறை கேட்டபோதிலும் பல்வேறு சாக்குபோக்கு கூறி தவிர்த்து வந்தார். இதையடுத்து தான் கொடுத்த ரூ.9 லட்சத்தை திருமுருகன் கேட்டுள்ளார். ஆனால் அவர் தராமல் இழுத்தடித்து வந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த திருமுருகன், இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று மாதவனை கைது செய்தனர். அவர் இதுபோல் வேறு யாரிடமாவது, அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு உள்ளாரா என போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.