தர்மபுரி, ஜூலை 28: கர்நாடக அணைகளிலிருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து சுமார் 1 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் எதிரொலியாக ஒகேனக்கல் காவிரியில் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று பிற்பகல் விநாடிக்கு 78,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 88,000 கனஅடியாக அதிகரித்தது.
இதனால், ஒகேனக்கல்லில் 3வது முறையாக மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவிகள், பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. இதனிடையே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று மாலை ஆய்வு செய்தார். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டார். பாதிப்பு ஏற்படும் இடங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையடுத்து, ஊட்டமலை மற்றும் ஆலம்பாடி உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை சார்பில், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒகேனக்கல் காவிரி கரையோரம் கிராம மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தவாறு உள்ளனர்.