தர்மபுரி, அக்.26: தர்மபுரியில், பிரதான குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அதை சீரமைக்கும் பணி 2 நாள் நடக்கிறது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி நகராட்சிக்கு சொந்தமான பஞ்சப்பள்ளி, தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் குடிநீரினை, சந்தைப்பேட்டை மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் சேகரித்து, பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள குடிநீர் பிரதான குழாய் பழுதடைந்துள்ளதையடுத்து, அங்கு பராமரிப்பு பணி மற்றும் சீரமைக்கும் பணி நாளை (27ம்தேதி) மற்றும் 28ம்தேதி ஆகிய 2 நாட்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் இன்று (26ம்தேதி) விநியோகம் செய்யும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர்
தெரிவித்துள்ளார்.
