நல்லம்பள்ளி, டிச.15: நல்லம்பள்ளி பகுதியில் பரவலாக சாமந்தி சாகுபடி செய்துள்ள நிலையில், விலை குறைந்துள்ளதால் பூக்களை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள பொதுமக்கள் அதிகப்படியான விவசாயம் சார்ந்த தொழில்களையே செய்து வருகின்றனர். தண்டுகாரம்பட்டி, ஏலகிரி, ஜருகு, தொப்பூர், லளிகம், இண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் சாமந்தி சாகுபடி செய்துள்ளனர். சாமந்தி பூக்களை விவசாயிகள் அறுவடை செய்து பெங்களூரு மற்றும் ஓசூர் சந்தைக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகின்றனர். தீப திருநாளை முன்னிட்டு சாமந்தி விலை உயர்ந்தது. தொடர்ந்து தேவை குறைந்ததால், விலையும் சரிந்து வருவதால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘நல்லம்பள்ளி பகுதியில் அதிகப்படியாக விவசாயிகள் சாமந்தி சாகுபடி செய்துள்ளனர். கார்த்திகை தீபத்தின்போது ஒரு கிலோ சாமந்தி ரூ.130 முதல் ரூ.150 வரை விற்பனையானது. இதனால், ஓரளவு லாபம் கிடைத்தது. தற்போது ஒரு கிலோவுக்கு ரூ.30 மட்டுமே கிடைக்கிறது. பூக்களை பறிக்கும் ஆட்களுக்கு கூட கூலி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் சாமந்திப் பூக்களை அறுக்காமல் தோட்டத்திலேயே விட்டுள்ளனர். அடுத்த வாரங்களில் விலை உயர்ந்தால் மட்டுமே செலவிட்ட தொகையை எடுக்க முடியும்,’ என்றனர்.


