தர்மபுரி, டிச.15: தர்மபுரி சிப்காட் தொழிற்பூங்கா பணிகள் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தர்மபுரி வட்டம், அதகப்பாடி கிராமம் மற்றும் நல்லம்பள்ளி வட்டம் தடங்கம், அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமனஹள்ளி ஆகிய கிராமங்களில் சிப்காட் அமைப்பதற்காக மொத்தம் 1,733 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி, கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி பெறப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி, தர்மபுரி சிப்காட் தொழிற்பூங்கா திறந்து வைக்கப்பட்டது. இத்தொழிற்பூங்காவில் உட்புறசாலைகள், மழைநீர் வடிகால், தெருவிளக்கு, நீர் விநியோகம் போன்ற உட்கட்டமைப்பு மற்றும் இதர பணிகள் மேற்கொள்ள மொத்தம் ரூ.937.36 கோடி நிதி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1.35 கி.மீ., நீள அணுகு சாலைக்கான பணி முழுவதும் ரூ.14.04 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளதுடன், பூங்காவை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலை 44ன் சேவைச் சாலையை ரூ.5.42 கோடி திட்ட மதிப்பீட்டில் அகலப்படுத்த பணி ஆணை வழங்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்.
மேலும், முதற்கட்டமாக 200 ஏக்கர் நிலப்பரப்பில், மழைநீர் வடிகால், சிறுபாலங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.103.08 கோடி திட்ட நிதி ஒப்புதல் வழங்கப்பட்டு, அதில் முதற்கட்டமாக ரூ.66.70 கோடிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் 2026 ஜூன் மாதத்தில் முடிக்கப்படும். இதுவரை, இத்தொழிற் பூங்காவில் 9 தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.40.91 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இத்தொழிற் பூங்காவின் விரிவாக்கத்திற்காக(நிலை -2) தர்மபுரி வட்டம் அதகப்பாடி கிராமம் மற்றும் நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் மற்றும் பாலஜங்கமனஹள்ளி ஆகிய கிராமங்களில் மொத்தம் 690 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டு, அதில் 132 ஏக்கர் பட்டா நிலம் கையகப்படுத்த அரசின் நிருவாக அனுமதி பெறப்பட்டதை தொடர்ந்து தற்போது நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அத்துடன் 558 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தினை சிப்காட் நிறுவனம் பெயரில் நில உரிமை மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தர்மபுரி சிப்காட் தொழிற்பூங்கா முழு செயல்பாட்டிற்கு வரும் போது, தமிழ்நாட்டிலுள்ள மிகப் பெரிய தொழிற்பூங்காக்களில் ஒன்றாக திகழும்.
மேலும், இத்தொழிற்பூங்காவில் பேட்டரி மற்றும் மின்வாகனங்களின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்நிலையில், கடந்த மாதம் 3ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தற்போது சிறு பாலங்கள் கட்டும்பணி, சாலை அமைக்கும் பணிகள் வேகமாக நடக்கிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சிப்காட்டில் ஏற்கனவே 9 கம்பெனிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்னும் மூன்று மாதத்தில் சிப்காட் பணிகள் முடிக்கப்பட்டு, வெகு விரைவில் நிறைய கம்பெனிகள் வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 9 கம்பெனிகள் வந்து உள்ள நிலையில், மேலும், 250க்கும் மேற்பட்ட கம்பெனிகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த கம்பெனிகள் வந்தால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கம்பெனிகள் ஒவ்வொன்றாக வந்தவுடன், வேலைவாய்ப்பு பெருகிக் கொண்டே வரும். சிப்காட் தொழிற்பூங்கா பணிகள், வரும் பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்கப்படும். தற்போது, தொடங்கப்பட்ட 9 கம்பெனிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது,’ என்றனர்.


