தர்மபுரி, நவ.15: தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை சுதா தலைமை வகித்தார். முன்னாள் பிரதமர் நேருவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரது சிறந்த பண்புகள் குறித்து விளக்கி பேசினர். தொடர்ந்து மாணவிகளின் சார்பில் பரதநாட்டியம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், மாநில -மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவித் தலைமை ஆசிரியர்கள் முருகன், கன்னல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு அரசு பள்ளிகளிலும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. ஜவகர்லால் நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு, தர்மபுரியில் உள்ள அவரது சிலைக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் பிரதாபன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் மாதையன், பாலன், ராஜி, சம்பத் மற்றும் சாக்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பென்னாகரம் அருகே குழிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி தலைமை வகித்து, நேரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
விழாவையொட்டி மாறுவேட நிகழ்ச்சி, மேடை பேச்சு, மழலைபாடல், கதை சொல்லுதல், சிறுவர் நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. குழந்தைகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில், தங்களுக்கு விருப்பமான தலைப்பில் பேசி மகிழ்ந்தனர். விழாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாகலட்சுமி, விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பென்னாகரம் அருகே நாகாவதி அணை எர்ரப்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நேரு பிறந்தநாளையொட்டி குழந்தைகள் தினவிழா நடந்தது. இதையொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, ெவற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் சரவணன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் விமலா, சத்யா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
