செங்கம், ஜூலை 14: திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், செங்கம் நகராட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு விழா மற்றும் 60 அடி உயர கம்பத்தில் திமுக கொடியேற்று விழா நேற்று மாலை நடந்தது. மாவட்ட செயலாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு தலைமை தாங்கினார். சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, எம்பி சி.என்.அண்ணாதுரை, மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், நகர செயலாளர் மு.அன்பழகன், நகராட்சி தலைவர் சாதிக்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செங்கம் எம்எல்ஏவும் மாவட்ட துணைச்செயலாளருமான மு.பெ.கிரி வரவேற்றார். விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் உருவச்சிலையை திறந்து வைத்து திமுக கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டையும், தமிழ்மொழியையும், கலாச்சாரத்தையும் கலைஞர் அன்றைய காலகட்டத்தில் கையிலே பேனாவையும் புத்தகத்தையும் வைத்து கொள்கை ரீதியில் காப்பாற்றினார்.
அதே நன்றியுடன் செங்கம் பகுதி மக்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை திறப்பதற்காக என்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 இடங்களில் கலைஞரின் சிலையை திறந்து வைத்துள்ளேன். முதலாவதாக திருவண்ணாமலை, இரண்டாவதாக போளூர். மூன்றாவதாக செங்கம் நகரில் கலைஞர் சிலையை திறந்து வைத்துள்ளேன். மீதமுள்ள 5 சட்டமன்ற தொகுதியிலும் விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகளை அண்ணன் எ.வ.வேலு செய்ய வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணி அறக்கட்டளை நிதியாக ரூ.50 லட்சத்தை முதன்முதலில் கொடுத்து அமைச்சர் என்னை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இனி திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். நான் அதில் கலந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இளைஞர் அணி அறக்கட்டளைக்கு இதுபோன்ற கூடுதலான நிதியை மற்ற இடங்களில் நான் பெற முடியும்.
இங்கு கூடியிருக்கிற மக்களை பார்க்கும்போது செங்கம் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் உதயசூரியன் உதிக்கும். அதேபோல திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 100 சதவீதம் திமுக வெற்றி பெறும் என்பதற்கு உறுதி ஏற்க வேண்டும். மீண்டும் தமிழக முதல்வர் தலைமையில் நல்லாட்சி அமைய நீங்கள் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.