பாகூர், அக் 30: வேலூர் மாவட்டம் காட்பாடி பாரதி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (46). இவரது மனைவி லட்சுமி லீலா (42). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் வந்தனா (18). கிருமாம்பாக்கத்தில உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி எதிரே உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, கல்லூரிக்கு சென்று வந்தார். இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக வந்தனா விடுதிக்கு வரவில்லை என்று வார்டன் போன் செய்து, அவரது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை லட்சுமி லீலா, கிருமாம்பாக்கம் விடுதிக்கு வந்து விசாரித்துள்ளார். அதில், கடந்த 7ம் தேதி மாலை வந்தனா, அவரது சமூக வலைத்தள தோழி பிரியா (எ) ரோஸி என்பவருடன், விடுதியில் இருந்து துணிமணிகளை எடுத்து கொண்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து அவரது தாய் லட்சுமி லீலா, கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement
