புதுச்சேரி, செப். 30: தவெக புஸ்சி ஆனந்த், புதுவையில் தஞ்சமாகி உள்ளாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆனது. அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதை கண்டுகொள்ளாமல், இருந்த புஸ்சி ஆனந்த், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் ஆகியோர் மீது கலவரத்தில் ஈடுபடுதல், பொது, தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.
நெரிசல் அசம்பாவிதம் குறித்து போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர், வராவிட்டால் கைது செய்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து புஸ்சி ஆனந்த் நிர்மல்குமார் ஆகியோர் தலைமறைவாகியுள்ளதாக தெரிகிறது. கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டோல்கேட் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை. மேலும் அவர் ஆந்திராவுக்கு தப்பி சென்று இருக்கலாமா? என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
இதற்கிடையே புஸ்சி ஆனந்தின் வீடு புதுச்சேரி மாநிலம் ஏனாம் வெங்கடாசலப்பிள்ளை வீதியில் உள்ளது. மேலும் முன்னாள் எம்எல்ஏ, முதல்வர் ரங்கசாமிக்கு வேண்டியப்பட்டவர் என்பதால், புதுச்சேரியில் இருக்கலாம் என தமிழக போலீசார் எண்ணி பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினர். மேலும் போலீசார், மாறு வேடங்களில் முகாமிட்டு, புஸ்சி ஆனந்தை தேடி வருகின்றனர். மேலும் அவருடன் தொடர்பில் இருக்கும் முக்கிய பிரமுகர்களையும் விசாரணை செய்து வருவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.