திண்டிவனம், செப். 30: திண்டிவனம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சலவாதி கிராமம் கவுசல்யா நகர் பகுதியை சேர்ந்தவர் தனசெல்வி (56). இவர் வீடூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டில் தனியாக உள்ளதால் நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டை பூட்டி விட்டு பக்கத்து வீட்டில் சென்று தூங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 14 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தனசெல்வி, ரோசனை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து போலீசார், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் வீட்டை ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களின் கைரேகைகளை சேகரித்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.