உளுந்தூர்பேட்டை, செப். 27: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி விருத்தாசலம் சாலையில் உள்ள பழமையான தீப்பாய்ந்த அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் கோயில் பூஜைகள் நடைபெற்று கோயில் கதவு பூட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கோயில் உள்ளே சென்று பார்த்தபோது தீப்பாய்ந்த அம்மன் கழுத்தில் இருந்த தங்கத் தாலி திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்தது. இந்த கோயிலுக்கு அருகில் உள்ள பெரியாயி அம்மன் கோயில் உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இரண்டு கோயில்களில் கதவின் பூட்டை உடைத்து உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகை கொள்ளை அடித்து செல்லப்பட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
+
Advertisement