உளுந்தூர்பேட்டை, செப். 27: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி அன்னை சத்யா தெருவில் வசித்து வரும் ராஜா என்பவரின் மனைவி துர்காதேவி (40), இவர் தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு கொட்டகையில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கடையை மூடும்போது விறகு அடுப்பை சரிவர அணைக்காமல் சென்றுள்ளதாக தெரிகிறது. நேற்று அதிகாலை திடீரென கொட்டகை தீ பிடித்து எரிந்ததோடு கடையில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
+
Advertisement