வடலூர், செப். 25: சேத்தியாத்தோப்பு அருகே வடக்கு சென்னி நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கயல்விழி(37). இவருக்கும், அரியலூர் மாவட்டம் கோவில் வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(41) என்பவருக்கும் திருமணமாகி சுமார் 10 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சரவணனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி கயல்விழிக்கு தெரிய வரவே இது தொடர்பாக கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சரவணன் மனைவியிடம் சண்டை போட்டு விட்டு கோபித்துக் கொண்டு கடந்த ஐந்து வருடங்களாக வடலூரில் வாடகை வீட்டில் அப்பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். தகவல் அறிந்த கயல்விழி நேற்று வடலூரில் உள்ள கணவர் சரவணன் வீட்டிற்கு வந்து ஏன் இப்படி செய்கிறாய் கேட்டுள்ளார். கோபம் அடைந்த சரவணன், மனைவி கயல்விழியை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி கத்தியால் இடது கையில் வெட்டி கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். அங்கிருந்து தப்பி வந்த கயல்விழி இது குறித்து வடலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் வடலூர் எஸ்ஐ சேகர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
+
Advertisement