Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

விஜய் பேசுவது சினிமா வசனங்கள் ஜெகத்ரட்சகன் எம்பி தாக்கு

புதுச்சேரி, நவ. 25: சினிமாவில் பேசும் வசனங்கள் போன்று நடிகர் விஜய் பேசுகிறார் என ெஜகத்ரட்சகன் எம்பி கூறினார். புதுச்சேரியில் திமுக சார்பில், மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் மண்ணாடிப்பட்டு, திருபுவனை, நெட்டப்பாக்கம், மற்றும் மங்கலம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 4ம் கட்ட திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்த திமுக கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் 21 தொகுதிகளில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. புதுவையை சிறந்த மாநிலமாகவும் இந்தியாவுக்கு வழிகாட்டுகின்ற மாநிலமாகவும் உருவாக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் எண்ணமாக உள்ளது. அதன்படி மீதமுள்ள தொகுதிகளில் இந்த மாதத்திற்கு உள்ளாக உறுப்பினர் படிவம் வழங்கி உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். தேர்தல் திருத்த படிவம் வழங்கியதில் தேர்தல் ஆணையம் தவறான கருத்துக்களை வெளியிடுகிறது. பட்டப்படிப்பு படித்தவர்கள்கூட இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு உள்ளது. எஸ்.ஐ.ஆர் பயன்படுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பீகார் போன்ற ஒரே திருவிழா நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நினைக்கிறது. தமிழகம், புதுச்சேரியில் நிச்சயமாக அது எடுபடாது.

ஒன்றிய அரசு தமிழகத்தை மட்டும் புறக்கணிக்கவில்லை, தமிழர்களையும் புறக்கணிக்கிறார்கள். வடநாடு, தென்னாடு என்பது போன்று ஒரு பிரிவினையை மத்திய அரசு உருவாக்குகிறது. விடுதலை போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்கள் தமிழ்நாடு, புதுச்சேரியில் இருக்கிறார்கள். புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாத ஒரு நிலைமையை உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது, புதுச்சேரி ஆட்சியை டெல்லியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரியில் முதல்வருக்கு, அமைச்சர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லாத நிலையை ஒன்றிய அரசு ஏற்படுத்தி உள்ளது. இந்த மண்ணில் பிறந்தவர்களுக்குதான் இந்த மண்வாசனை தெரியும். எங்கோ வடநாட்டில் பிறந்த ஒருவரை கொண்டுவந்து ஆட்சி செய்ய நினைப்பது ஏற்புடையதல்ல. புதுச்சேரியை புதுச்சேரியில் உள்ளவர்கள்தான் ஆள வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு.

திமுக குறித்து விஜய் விமர்சிப்பது ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது. சினிமாவில் பேசும் வசனங்கள் போன்றுள்ளது. சட்டம் தெரியாமல் விஜய் பேசுகிறார். நீட் தேர்வில் இருந்து விலகளிப்பது ஒன்றிய அரசிடம் உள்ளது. இதற்கான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. திமுகவை எதிர்க்க எதிரிகளே கிடையாது. செல்லும் இடமெல்லாம் மக்களுடைய ஆதரவு அமோகமாக உள்ளது. அண்ணாமலை, டிடிவி தினகரன் சந்திப்பு என்பது பொழுதுபோக்கானது. 2026ல் கண்டிப்பாக திமுக ஆட்சி அமைந்தே தீரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.