திருக்கோவிலூர், செப். 23: விழுப்புரம் மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் மகன் தட்சிணா (24). இவர் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருக்கோவிலூரில் ஏசி மெக்கானிக் வேலையை முடித்துவிட்டு இரவு 10 மணியளவில் விழுப்புரத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பில்ராம்பட்டு கூட்ரோடு சாலை அருகே சென்றபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தட்சணாவை வழிமறித்து அவர் கையில் வைத்திருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு வாகனத்தை தள்ளி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தட்சணா, அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், தட்சணாவின் செல்போன் இருக்கும் டவரை வைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் வசந்த் (24), ஒடுவன்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் தாமோதரன் (19) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தபோது செல்போன் பறித்து சென்றது தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement