புதுச்சேரி, செப். 23: ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலியாக புதுச்சேரியில் நெய், ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்ட 60 வகையான பாண்லே பொருட்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி விகிதங்களை குறைப்பதற்கான சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் ஆகிய நான்கு வரி விகித அமைப்பு இருந்தது. தற்போது 5 மற்றும் 18 சதவீதம் என்ற எளிமையான ஜிஎஸ்டி வரி விகிதங்களாக மாற்றப்பட்டுள்ளது. 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட பெரும்பாலான பொருட்கள், சலுகை வரி விகிதமான 5 சதவீத வரி விதிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே பால் உற்பத்தி பொருட்களுக்கான வரி 12 சதவீதம், 18 சதவீதம் வரி விதிப்பின் கீழ் இருந்தது.
தற்போது 5 சதவீத வரி சலுகையின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து புதுச்சேரி பாண்லே நிறுவனம் பனீர், நெய், குல்பி, ஐஸ்கிரீம் ஆகியவற்றின் விலையை அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் நெய்யின் விலை ரூ.700லிருந்து, ரூ. 655 ஆகவும், 1 கிலோ பட்டர் விலை ரூ. 570 லிருந்து ரூ.533ஆகவும், 1 கிலோ பனீர் விலை ரூ.420 லிருந்து ரூ. 400 ஆகவும், ஐஸ்கிரீம் வகைகள் 90 மிலி ரூ.3, 250 மிலி ரூ.8, 500 மிலி ரூ.15, 1 லிட்டருக்கு ரூ.30 என்ற வகையில் ஐஸ்கிரீம் வகைகளுக்கு ஏற்ப விலை குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் அனைவரின் விருப்ப தேர்வாக இருக்கும் 70 மிலி குல்பி ரூ.40 லிருந்து ரூ.35 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பாண்லே நிறுவனம் தனது தயாரிப்பான நெய் முதல் பல்வேறு வகையான ஐஸ்கிரீம் வரை 60 பொருட்களுக்கான விலையை குறைத்து அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கான எம்ஆர்பி விலை, பாண்லே நிறுவனம் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்படும் விலை பட்டியலையும் பாண்லே வெளியிட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது.