உளுந்தூர்பேட்டை, ஆக. 23: உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் மதுரை தவெக மாநாட்டுக்கு சென்று சென்னை திரும்பிய டிராவல்ஸ் பேருந்து டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் மற்றும் பேருந்து டிரைவர்கள் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். சென்னை, பெரம்பூர், வியாசர்பாடி, எழும்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேற்றுமுன்தினம் மதுரையில் நடந்த அக்கட்சியின் மாநாட்டிற்கு தனியார் டிராவல்ஸ் பேருந்தில் சென்றனர். பின்னர் மாநாடு முடிந்து நேற்று அதிகாலை அந்த பேருந்தில் சென்னைக்கு திரும்பினர்.
பேருந்தை ரட்சகன் (28) என்பவர் ஓட்டி சென்றார். இந்தப் பேருந்து நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் சென்றபோது முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் டிரைவர் காட்டுநெமிலி கிராமத்தைச் சேர்ந்த செந்தாமரைச்செல்வன் (39) படுகாயமடைந்தார். அவருக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் பேருந்து டிரைவர் ரட்சகன் மற்றும் பேருந்தில் சென்ற கார்த்திக் உள்ளிட்ட 9 தவெக தொண்டர்கள் லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தினால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் தவெக தொண்டர்கள் அவ்வழியாக சென்ற அரசு பேருந்தில் ஏறி சென்னைக்கு சென்றனர்.