பாமகவில் முக்கிய பதவி தலைமை நிர்வாக குழு உறுப்பினராக மூத்த மகள் காந்தி நியமனம் ராமதாஸ் அதிரடி உத்தரவு
திண்டிவனம், ஆக. 23: பாமகவில் அன்புமணிக்கு பதிலாக காந்தியை முன்னிறுத்தும் வகையில், ராமதாஸ் அதிரடி முடிவெடுத்துள்ளார். பாமக தலைமை நிர்வாக குழு உறுப்பினராக தனது மூத்த மகள் காந்தியை நியமித்து உத்தரவிட்டுள்ளார். பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி மோதல் தீவிரம் அடைந்துள்ளது. இருவரும் கட்சியை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இரண்டு பேருமே தனித்தனியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி அதன் தீர்மானத்தை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பாமகவில் அன்புமணிக்கு பதிலாக தனது மூத்த மகள் காந்தியை ராமதாஸ் முன்னிலைப்படுத்தி வருகிறார். கடந்த 10ம் தேதி பூம்புகாரில் நடந்த வன்னியர் மகளிர் ெபருவிழா மாநாட்டில் காந்தியை முதல் தீர்மானத்தை படிக்க வைத்து கட்சிக்காரர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். தொடர்ந்து கடந்த 17ம் ேததி பட்டானூரில் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மேடையில் தனக்கு பக்கத்தில் உட்காரவைத்து முக்கியத்துவம் கொடுத்தார் ராமதாஸ். இந்த பொதுக்குழுகூட்டத்தில் தான் பாமகவில் எட்டு பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைத்து ராமதாசிடம் அறிக்கை அளித்தது. அதில், கட்சிக்கும், ராமதாசுக்கும் எதிராக செயல்பட்டு கட்சிக்கு களங்கத்தையும், குழப்பத்தையும், பிளவையும் அன்புமணி ஏற்படுத்தியுள்ளார்.
அவர் நடத்திய பொதுக்குழுவில் காலி நாற்காலி போட்டு ராமதாசை அவமானப்படுத்தியது, மக்கள் தொலைக்காட்சியை கைப்பற்றியது உள்பட 16 குற்றச்சாட்டுகள் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. இதன் பின்னர் ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் தைலாபுரத்தில் கடந்த 18ம் ேததி கூடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்துக்கு பின் அன்புமணியிடம் விளக்கம் கேட்டு பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. அதில், ஏழு நாட்களுக்குள் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளிக்கவில்லை என்றால் அவர் மீது பாமக நிறுவனர் ராமதாஸ் மேல் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாமக தலைமை நிர்வாக குழு உறுப்பினராக காந்தியை நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே இந்த குழுவில் ராமதாஸ், கவுர தலைவர் ஜி.கேமணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பொதுச்செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையது மன்சூர் உசேன் உள்பட 21 பேர் உள்ளனர். தற்போது காந்தியையும் சேர்த்து பாமகவில் தலைமை நிர்வாக குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. பாமகவில் அன்புமணிக்கு பதிலாக காந்தியை கட்சி தலைவராக நியமிக்க காய் நகர்த்தி வரும் ராமதாஸ் அதற்கு முன்னோட்டமாக தற்போது அவருக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுத்துள்ளார் என தெரிகிறது.