மங்கலம்பேட்டை, நவ. 22: மங்கலம்பேட்டை அருகே வீடு தீப்பிடித்து எரிந்து மாற்றுத்திறனாளி கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே எடசித்தூர் கிராமத்தில் பட்டியலின மக்களின் குலதெய்வமான இருசாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு அருகில் அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் அழகேசன் (50) என்கிற மாற்றுத்திறனாளி கூரை வீடு கட்டி தங்கி வசித்து வந்தார். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குறி சொல்லி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை மாற்றுத்திறனாளி அழகேசன் தங்கி இருந்த கூரை வீடு, திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட அழகேசன் வெளியே வரமுடியாமல் தீயில் எரிந்து கருகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
அவரது வீட்டிற்கு அருகாமையில் யாரும் இல்லாதததால் தீயை அணைக்க முடியாத சூழல் ஏற்பட்டு அழகேசன் எரிந்து கருகினார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து சென்ற மங்கலம்பேட்டை காவல்துறையினர் உயிரிழந்த அழகேசன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வீடு தீப்பிடித்து எரிந்து மாற்றுத்திறனாளி கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


