சிதம்பரம், செப். 22: திமுக கூட்டணியின் போது அமைச்சர் பதவி பெற்ற அன்புமணிக்கு, திமுகவை பற்றி பேச தகுதி கிடையாது என அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாவட்ட மற்றும் நகர திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மானம் ஏற்பு பொதுக்கூட்டம் அனந்தீஸ்வரன்கோயில் தெருவில் நடைபெற்றது. கூட்டத்தில் நகர செயலாளரும், நகர மன்ற தலைவருமான கே.ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்விஜயராகவன் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், பொறியாளர் அணி அப்புசந்திரசேகர், மாணவரணி அப்பு சந்தியநாராயணன், நகர துணை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், இளங்கோவன், விஜயாரமேஷ், தொழில்நுட்ப அணி ஜாபர்அலி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: திமுக தொண்டர்கள், கொள்கை வீரர்களாக உள்ளனர். கொரோனா காலத்தில் நாடே முடங்கியிருந்த போது களத்தில் இறங்கி திமுகவினர் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அதன் பிறகு மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் முடிவெடுத்தார்கள். தற்போது ஒரு நடிகர் வந்துள்ளார்.
கொரோனாவின்போது வெளியில் வராதவர், மக்களை பார்க்காதவர். தற்போது தேர்தல் வருவதால் சுந்தரா டிராவல்ஸ் போன்று பச்சை பேருந்தில் ஒருவர் வருகிறார். மற்றொருவர் காவி பேருந்தில் வருகிறார். நமது முதல்வர் ஸ்டாலின் மக்களை பார்க்கிறார். மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 1 கோடியே 15 லட்சம் பெண்கள், உரிமை தொகை பெறுகின்றனர்.
பாமக அன்புமணி பச்சை பொய் பேசுகிறார். அப்பாவிற்கு துரோகம் செய்தவர். அவர் மக்களுக்கு என்ன செய்தார்?. பதவிக்காக முகவரியையே மாற்றி கட்சியை கைப்பற்றியவர், திமுகவை பற்றி பேச என்ன தகுதி உள்ளது. திமுக கூட்டணியில் இருந்த போதுதான் அன்புமணி மந்திரியானார். திமுகவை பற்றி பேச அன்புமணிக்கு தகுதி கிடையாது. மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கும், மின்தேவைக்குதான் என்எல்சி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது.
நிலம் கொடுத்த விவசாயிகள், அதிக தொகை பெற்று பங்களா கட்டியுள்ளனர். மேலும் காலை சிற்றுண்டி திட்டத்தில் 20 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். புதுமை பெண் திட்டத்தில் மாணவியர்கள் பயன்பெறுகின்றனர். சிதம்பரம் நகரத்தில் ரூ.400 கோடிக்கு நலத்திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் திமுக மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி சிறப்புரையாற்றினார்.
தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி நகர மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், மணிகண்டன், ராஜன்,தாரணி, சுதா, கல்பனா, சுந்தரி, மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி,, இளைஞர் அணி அமைப்பாளர் மக்கள் அருள், தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர்,ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, சங்கர், தங்க.ஆனந்தன், முத்து.பெருமாள், மதியழகன், மனோகர், கலையரசன், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி உள்ளிட்ட ,மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பலர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.