மேல்மலையனூர், ஆக. 22: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயில் பிரசித்திபெற்ற அம்மன் திருத்தலமாகும். இக்கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் ஆடி மாதம் என்பதால் குலதெய்வ வழிபாட்டிற்காகவும், வெள்ளிக்கிழமைகளிலும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்தனர். இந்நிலையில் பக்தர்கள் அங்காளம்மனுக்கு வேண்டுதலுக்காக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ரொக்கமாக ரூபாய் 1,30,99,432, தங்கம் 174 கிராம், வெள்ளி 1364 கிராம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர்கள் ஏழுமலை, மதியழகன், சுரேஷ், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் ஆகியோர் மேற்பார்வை செய்தனர். காணிக்கை எண்ணும் பணி வீடியோ பதிவு செய்யப்பட்டது. மேலும் பாதுகாப்பு பணியில் மேல்மலையனூர் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
+
Advertisement