காலாப்பட்டு, நவ. 21: மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழி தாக்குதல் நடந்ததை அடுத்து, கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக சாகர் கவாச் மற்றும் ஆபரேஷன் ஆம்லா போன்ற தலைப்புகளில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆண்டிற்கு 2 முறை இது போன்று பாதுகாப்பு ஒத்திகை நாடு முழுவதும் உள்ள கடலோர பகுதியில் நடத்தப்படும். காவல் துறையினரே மாறு வேடத்தில் கடற்பகுதிகள் மற்றும் முக்கிய இடங்களில் நுழைவார்கள். அவர்களை போலீசார் பல குழுக்களாகப் பிரிந்து தடுத்து, தாக்குதல் நடப்பதை முறியடிப்பது போன்றவைகள் இந்த பாதுகாப்பு ஒத்திகைகளில் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டிற்கான பாதுகாப்பு ஒத்திகை நேற்று, புதுச்சேரி- சென்னை கிழக்கு கடற்கரை சாலை காலாப்பட்டு, கோட்டக்குப்பம், தந்திரயான்குப்பம், சின்ன முதலியார்சாவடி, பொம்மையார்பாளையம் கடலோர பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.
சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையை அடுத்து, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைகழக வாயில், மத்திய பல்கலைக்கழகம் வாயில்களில் புதுச்சேரி கமாண்டோ போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கடலோர பகுதிகளான பிள்ளைச்சாவடி, சின்னக்காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, கனகசெட்டிக்குளம் மற்றும் தமிழக பகுதியான சோதனைகுப்பம், நடுக்குப்பம், தந்திரயான்குப்பம், சின்ன முதலியார்சாவடிகுப்பம், ஆரோ பீச், பொம்மையார்பாளையம் ஆகிய கடலோர பகுதிகளில் தமிழக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.


